அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோவில், திருமுருகன் பூண்டி, அவிநாசி, கோவை.

 

 

 

              கோவையை அடுத்த அவிநாசியிலிருந்து 5 கி.மீ தென்கிழக்கே நொய்யல் ஆற்றின் கரையோரமாக சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தலமாகும்.

 

                அருள்மிகு திருமுருகநாதர் அம்மன் முயங்கு பூண்முலையம்மை உடன் காட்சியளிக்கிறார். முருகப்பெருமான் தனது சூரசம்ஹார வதத்தினால் ஏற்பட்ட பாவங்களை போக்க வழிபட்ட திருத்தலமாகும் இது. முருகப்பெருமானே வழி பட்டதினால் இவ்விடம் திருமுருகன் பூண்டி என அழைக்கப் படலாயிற்று.

                தலவிருட்சமாக குருக்கத்தி விளங்குகிறது. சண்முக, பிரம்ம, ஞான தீர்த்தங்கள் உள்ளன. மூலவருடன் சண்முகர், துர்க்கை, 63 நாயன்மார்களும் தனிச் சந்நிதி கொண்டு விளங்குகின்றனர். நவக்கிரகங்களும் உள்ளன.

 

                சுந்திரமூர்த்தி சுவாமிகளும், திருநாவுக்கரசரும் இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளனர். அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார். தேவாரத் திருப்பதிகம் பெற்ற கொங்கு மண்டலத் தலங்களில் இதுவும் முக்கியமானது ஆகும்.

                 இங்கு சுந்தரமூர்த்தி சுவாமிக்கு சேரமான் பெருமான் நாயனார் அளித்த பெரும் பொருளை ஈசன்தன் பூதகணங்களை வடுகவேடுவர் உருவில் விட்டு கொள்ளையிட்டு விடுகிறார். பிறகு சுந்தரர் பதிகம் பாடியதை அடுத்து அப்பொருட்களை திருப்பி அளிக்கிறார்.

 

                கோனேரின்மை கொண்டான், வீரராஜேந்திர தேவன், குலோத்துங்கன்,  விக்ரம சோழன், வீரநஞ்சராய உடையார் போன்றோரின் 9 கல்வெட்டுகள் உள்ளன. தை மாதத்தில் வேடுபரி உற்சவம் மிகவும் சிறப்பான ஒன்றாகும்.